தொடக்க கால பாண்டிய சமூகம்

பண்டைய தமிழ்நாட்டை கிறிஸ்து பிறப்பிற்கு முற்காலத்திலிருந்து கி.பி 200 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த வம்சம் தொடக்க கால பாண்டிய சமூகம் ஆகும். சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை மற்றும் புறநானூறு ஆகிய தொகுப்புகள் அந்தக் கால கட்டத்தின் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

மக்கள்[தொகு]

தொடக்க கால பாண்டிய ஆட்சிக்காலத்திலேயே தமிழ் சமுதாயம் மக்களிடையே பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அவை, பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற வேதகால வகைப்பாட்டிலிருந்து வேறுபட்டது.[1] தமிழ் மக்களிடையே அரசருக்குக் கீழான மிக உயர்ந்த பிரிவு அறிவர்கள் அல்லது முனிவர்கள் ஆவர். அவர்கள் உலக வசதிகளையும், பற்றுக்களையும் துறந்து, பெரும்பாலும் நகரங்களுக்கு வெளியே வாழ்ந்து வந்தனர். அடுத்ததாக உழவர்கள் அல்லது விவசாயிகள் இரண்டாம் நிலையில் வைக்கப்படுகிறார்கள். உழவர்களைத் தொடர்ந்து பொறுப்பர்கள் அல்லது ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் தரத்தில் மூன்றாவது நிலையில் உள்ளனர். அதன் பிறகு, ஆயர்கள் அல்லது கால்நடை வளர்ப்போரும், பின்னர் வேட்டுவர்களும் வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கலைஞர்களான, பொற்கொல்லர்கள் மற்றும் கருமான்களும் அதைத் தொடர்ந்து வலையர்கள் அல்லது மீனவர்களும் இறுதியாக புலையர்கள் அல்லது தோட்டிகள் வருகிறார்கள். 

உயர்குடி மக்களாக வகைப்படுத்தப்பட்டோர் சில வசதிகளை அனுபவித்தனர். உதாரணமாக, தெருக்களில் உயர் சாதியினர் கடந்துசெல்லும் போது,  தாழ்ந்த வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்டோர் விலகி வழி விட வேண்டும்.  புலையரொருவர் ஒரு பிரபுவை சந்திக்க நேர்ந்தால், தலை குனிந்து, உடல் குறுகி வேண்டி வணங்கிட வேண்டும். வர்க்க வேறுபாடுகள் வாழ்க்கையின் பல அம்சங்களில் மிகவும் வெளிப்படையானவையாக இருந்தன. மக்கள் அணிந்திருந்த ஆடைகளும், அவர்கள் தங்களை தயார்படுத்திய விதமும், அவர்கள் உட்கொண்ட உணவு வகைகளும் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கும் வேறுபட்டவையாய் இருந்தன. வர்க்க அடிப்படையிலான சமூக சமத்துவமின்மை இருந்தபோதிலும், சமூகத்தில் அடிமைத்தனம் இல்லை.[2]

மக்கள் பின்வருமாறு தொழில் வாரியாக வகைப்படுத்தப்பட்ட குழுக்களாக இருந்தனர். அவை, துணி வெளுப்பவர்கள், தச்சர்கள், கருமான்கள், சிற்பிகள், பொற்கொல்லர்கள், தையலர்கள், ஆபரணம் செய்பவர்கள், குயவர்கள், இசைக்கலைஞர்கள், பாதிரியார்கள், எண்ணெய்விற்பவர்கள், பழரத மது விற்பனையாளர்கள், பரத்தையர்கள், நடிகர்கள் மற்றும் செருப்புத் தைப்பவர்கள் போன்றோராவர். ஒவ்வொரு தொழில் குழுக்களும் அவர்களுக்கான குடியிருப்புப் பகுதியான சேரியில் வாழ்ந்தனர் - (சேரி - ஒவ்வொரு தொழில் பிரிவினரும் எந்த சிரமமுமின்றி வாழ்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு - இறுதி விளைவாக சாதி அமைப்பிற்கு வழிவகுத்தது)[3]

சமூகத்தில் பெண்களின் பங்கு[தொகு]

இரு பாலினத்தவரிடையே வேறுபாடு சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் சமத்துவமின்மை நிலவியது. பெண்களுக்கு சொத்துரிமை சட்டப்படியாக இல்லாமல் இருந்தது. பொதுவாகவே, பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே கருதப்பட்டனர், நடத்தப்பட்டனர்.[4] இருப்பினும், சமூக வாழ்வில், பெண்கள் வணிகம் மற்றும் கேளிக்கை போன்றவற்றில் இயல்பாக ஈடுபட்டனர். நகரங்கள் மற்றும் பெருநகரங்களில், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த பெண்கள் வேலைக்காரர்களாக, விற்பனையாளர்களாக, கடைக்காரர்களாக, பணக்கார குடும்பங்களில் இருந்த பணியாளர்களாக பணிபுரிந்தனர். கிராமங்களில், வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்தார்கள். ஆண்களுடன் உடலுழைப்பில் சிரமங்களைப் பகிர்ந்து கொண்டனர். உயர் வகுப்புகளின் பெண்கள் தங்கள் வீட்டுப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி இல்லை. விழாக்காலங்களில் அவர்கள் ஊர்வலங்களில் கலந்து கொண்டனர். தங்கள் இல்ல நிகழ்வுகளுக்கும், உறவுகளுக்கும் வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்தனர். பெண்களால் அனுபவிக்கப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, திருமணத்திற்கு முன் இளைஞர்களுக்கு ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ள முடிந்தது.[5] எனினும், விதவைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது - அவர்கள் மிக கடுமையான விதிகளின் படி வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவோ அல்லது எந்த விதமான கேளிக்கைகளிலும் பங்கேற்கவோ தடை விதிக்கப்பட்டது. சதி அல்லது உடன்கட்டை ஏறல் என்ற பழக்கமும் பழந்தமிழ் சமுதாயத்தில் எங்கும் நிலவுகின்ற ஒரு நடைமுறையாக இருந்தது. இந்நடைமுறை தீப்பாய்தல் என அழைக்கப்பட்டது.[6] பாண்டிய அரசன் பூதப்பாண்டியன் மறைந்த போது, அவரது அரசி பெருங்கோப்பெண்டு கணவரின் சடலத்திற்கு மூட்டிய தீயில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.[7][8] பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களின் படைப்புகளைக் காண முடிகிறது. அவர்களில் ஔவையார், முடத்தமக்கன்னியர், காக்கை பாடினியார், நாச்செல்லையார், நாகையார், நன்முல்லையார், பொன்முடியார், இளவேனியார் போன்றோர் உள்ளடங்குவர். [9]

உணவு[தொகு]

இங்குள்ள மக்கள் அரிசி மக்காச்சோளம், தினை, பால், வெண்ணெய் மற்றும் தேன் ஆகியவை பொதுவான பயன்பாட்டில் இருந்ததால், இவற்றை உணவாக சாப்பிட்டனர்.[10] பரதவர்கள் (மீனவர்) மீன்களை அவர்களின் முக்கிய உணவாக சாப்பிட்டார், அதே சமயம் முல்லை பகுதிகளில் உள்ள மக்கள் பால் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களை பெரிதும் பயன்படுத்தினர். குறிஞ்சி மக்கள் வேட்டையாடியதன் மூலம் பெறப்பட்ட இறைச்சியை சாப்பிட்டனர். அரிசி, பால், தேன், நெய் மற்றும் வெல்லம் போன்றவற்றையும் சேர்த்து சாப்பிட்டனர். மிளகு, புளி மற்றும் உப்பு சமைக்கும் போது பயன்படுத்தப்பட்டது. நெய் பணக்காரர்களால் பயன்படுத்தப்பட்டது. காய்கறிகளும், பழங்களும் அவற்றின் உணவின் ஒரு பகுதியாக இருந்தன. இறைச்சி சாப்பிடுவது பொதுவானதாகும் - ஆடு, மான், முயல், கோழி, முள்ளம்பன்றி, பன்றிகள், மீன்கள் மற்றும் கருவாடு போன்ற மாமிசத்தை மக்கள் சாப்பிட்டனர்.[11]

வீடமைப்பு[தொகு]

நிலத்தின் புவியியல் வகை மற்றும் குடியிருப்பாளர்களின் பொருளாதார நிலை ஆகியவற்றால் வீட்டுவசதி வகை தீர்மானிக்கப்பட்டது. முல்லை மற்றும் மருத நிலமக்கள் குறிஞ்சி மற்றும் நெய்தல் மக்களுடன் ஒப்பிடும்போது வசதியான மற்றும் பெரிய வீடுகளில் வசித்து வந்தனர்.[12] பணக்காரர்கள் தங்கள் வீடுகளை ஓடால் கட்டப்பட்ட கூரைகள் மற்றும் சுட்ட செங்கற்கள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட சுவர்களால் கட்டினர், அதே நேரத்தில் ஏழைகள் தங்கள் குடிசைகளை மண்ணால் கட்டி புல், தேங்காய் இலைகள் அல்லது பனை ஓலைகளால் கட்டினர். குடிசைகள் மற்றும் வீடுகளில், தரையானது சாணியால் பூசப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Kanakasabhai. The Tamils Eighteen Hundred Years Ago. பக். 113–114. 
  2. Husaini. பக். 31. 
  3. Balambal. பக். 1–2. 
  4. Subrahmanian. பக். 346–347. 
  5. Husaini. பக். 33. 
  6. Balambal. பக். 31–32. 
  7. Pillai, Sivaraja. பக். 112–113. 
  8. Balambal. பக். 31. 
  9. Sundararajan. பக். 154. 
  10. Kanakasabhai. The Tamils Eighteen Hundred Years Ago. பக். 125. 
  11. Balambal. Studies in the History of the Sangam Age. பக். 4. 
  12. Balambal. Studies in the History of the Sangam Age. பக். 1.