திருநாளைப் போவார் நாயனார்

திருநாளைப் போவார் நாயனார்
பெயர்:திருநாளைப் போவார் நாயனார்
குலம்:பறையர்
பூசை நாள்:புரட்டாசி ரோகிணி
அவதாரத் தலம்:ஆதனூர்
முக்தித் தலம்:தில்லை [1]

திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2][3].

வரலாறு[தொகு]

தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ என்றோர் நல்லவர் இருந்தார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக கோரோசனை கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார்.

ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். விருப்பம் போன்று சென்று வாயிலினின்று இசைபாடி நின்றார். அப்பொழுது பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்த்தற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த் தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதி வலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு அமைவாயிருப்பது கண்டு குளம் அமைத்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம்மூர் சேர்ந்தார். இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு கண்துயிலாது கழித்தார். விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து போவாது தவித்தார். மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே “நாளைப்போவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு நாள் கழிதல் பொறாதவராய் ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும் வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதிவலம் வந்தவர் ‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடங்கும்பிடுவது எவ்வண்ணம்? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் கொண்டார். ‘இன்னல் தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று வருந்தித் துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத் திருவுளங்கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்’ என்னும் புன்முறுவற் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார்.

அந்நிலையில் தில்லை வாழந்தணர்கள் விழித்தெழுந்து கூத்தப் பெருமானது கட்டளையினை உணர்ந்து ‘எம்பெருமான் அருள் செய்த பணிசெய்வோம்’ என்று ஏத்திப் பெருங்காதலுடன் வந்து திருத்தொண்டராகிய திருநாளைப்போவாரை அடைந்து, ‘ஐயரே, அம்பலர் திருவடிகளால் உமக்கு வேள்வித் தீ அமைத்துத் தரவந்தோம்’ என வணங்கினார். தெய்வமறை முனிவர்களும் தெந்திசையின் மதிற்புறத்துத் திருவாயில் முன்பு தீயமைத்தார்கள். நாளைப்போவார், இறைவன் திருவடிகளை நினைத்து அத்தீக்குழியினை அடைந்தார். எரியை வலம் கொண்டு கைதொழுது அதனுள்ளே புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய் செங்கமல மலரில் உதித்த பிரமதேவனைப் போன்று செந்தீயில் வந்தெழுந்த அந்தணனாகத் தோன்றினார். அதுகண்டு தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார்கள். திருத்தொண்டர்கள் வணங்கி மனங்களித்தார்கள். வேள்வித்தீயில் மூழ்கி வெளிப்பட்ட திருநாளைப் போவாராம், மறைமுனிவர் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க, தில்லைவாழந்தணர் உடன்செல்லத் திருக்கோயிலின் கோபுரத்தைத் தொழுது உள்ளே சென்றார். உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். உடன் வந்தோர் யாவரும் அவரைக் காணாதவராயினர். நாளைப்போவார் அம்பலவர் திருவடியிற் கலந்து மறைந்தமை கண்டு தில்லைவாழந்தணர்கள் அதிசயித்தார்கள். முனிவர்கள் துதித்துப் போற்றினார்கள். வந்தணைந்த திருத்தொண்டராகிய நந்தனாரது வினைமாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமில்லா ஆனந்தக் கூத்தினர் அருள் புரிந்தார்.

“செம்மையே திருநாளைப் போவார்க்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை

மேற்கோள்கள்[தொகு]

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. 63 நாயன்மார்கள், ed. (07 பிப்ரவரி 2011). திருநாளைப் போவார் நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)

உசாத்துணைகள்[தொகு]

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]